அண்ணனுக்கு தம்பியின் பிறந்த நாள் வாழ்த்து
சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து கூறியது தற்போது பேசும்பொருளாக உள்ளது.
கடந்த 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய விஜய், சீமானை ஜாடை மாடையாக விமர்சனம் செய்து பேசியதாக சமூக ஊடங்களில் விவாதத்திற்குள்ளானது.
ஆரம்பத்தில் விஜய்யின் த.வெ.க-விற்கு வாழ்த்து தெரிவித்திருந்த சீமான், விஜய்-ன் பேச்சிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செய்தியாளர் சந்திப்புகளில் விஜய்-யை கடுமையாக சாடினார்.
அவரது விமர்சனத்திற்கு தற்போது வரை த.வெ.க தரப்பிலிருந்து எதிர்க்கருத்து வராத நிலையில், கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நமது எதிரி பாஜக மற்றும் திமுக தான் என்றும், மற்ற கட்சிகளை யாரும் விமர்சிக்க வேண்டாமெனவும் நிர்வாகிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சமூக ஊடகத்தின் வாயிலாக பிறந்தநாள் த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.”
சலசலப்பிற்கு மத்தியில் விஜய்-ன் இந்த வாழ்த்து செய்தி, அரசியல் நாகரீகமா அல்லது எதிர்கால அரசியல் மாற்றத்திற்கான அச்சாரமா என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.