ரயிலில் கஞ்சா கடத்தியவர் சென்னையில் கைது
சென்னை: ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தியவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் அலூரி சீதாராம ராஜு மாவட்டத்தை சேர்ந்தவர் கெம்மேலி கொசுமோ (வயது 49) இவர் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று, ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் 22 கிலோ கஞ்சாவை மூட்டையாக கட்டி சென்னையில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் மூட்டையை பரிசோதனை செய்தால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து, பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி புறநகர் மின்சார ரயிலில் பயணித்து ஊர்ப்பக்கம் சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த கூடுவாஞ்சேரி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவரிடமிருந்த 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.