இதோ வந்துட்டேன் நைனா….80-களில் கேட்ட அதே உற்சாக குரலில் ஜனகராஜ் பாடிய சூப்பர்ஹிட் பாடல்
சென்னை: ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையில் வருகிறார் நடிகர் ஜனகராஜ். கூடுதலாக இம்முறை தனது மகன் நவீன் ஜனகராஜ்- ஐயும் வெள்ளி திரைக்கு அறிமுகம் செய்கிறார்.
“பசி என்கிற தேசிய நோய்” என்னும் ஆவண குறும்படம் மூலம் தனது திரை பயணத்தை துவக்கியவர் இயக்குனர் சக்திவேல் தங்கமணி. கொரோனா காலகட்டத்தில் மக்கள் அனுபவித்த துன்பங்களை தத்ரூபமாக படமாக்கியிருந்தார். தற்போது பத்து ரூபாய் நாணயத்திற்கு பின்னால் இருக்கும் பொருளாதார அரசியலை வெளிக்கொண்டு வரும் விதமாக “காய்ன்ஸ்” என்னும் திரைப்படத்தை இயக்கவிருக்கிறார்.
இதில், பிரபல நடிகர் ஜனகராஜ்-ன் மகன் நவீன் ஜனகராஜ் அறிமுகமாகிறார். படப்பிடிப்புகள் விரைவில் துவங்கவுள்ள நிலையில், படக்குழுவினர் தற்போது “செல்லுமா..?, செல்லும்” என்று தொடங்கும் ப்ரோமோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பாடல் வரிகளை இயக்குனர் சக்திவேல் தங்கமணி எழுதியிருக்கிறார். ப்ரோமோ பாடல் வீடியோவில் “ஐயா பத்து ரூபா காய்ன்ஸ் பத்தி உங்க வாய்ஸ்ல”….என்று இயக்குனர் சக்திவேல் தங்கமணி தொடங்க, “இதோ வன்டேன் நைனா” என்று உற்சாக குரல் ஒலிக்க “செல்லுமா, செல்லும்” என்று பாட துவங்குகிறார் ஜனகராஜ்.
வயது மூப்பு காரணமாக நடிகர் ஜனகராஜ் உடல் மெலிந்திருந்தாலும், 80-களில் நாம் கேட்ட அதே புத்துணர்ச்சியுடன் பாடலை பாடி அசத்தியுள்ளார். பாடலில் பாதிக்கு மேல் அவரின் மகன் நவீன் ஜனகராஜ் இணைந்து பாடுகிறார்.
இருவரும் சேர்ந்து ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கின்றனர். பாடலுக்கு ஹமாரா சிவி இசையமைத்துள்ளார். பாடலுக்கான இயக்கத்தை இயக்குனர் சக்திவேல் தங்கமணியுடன் சேர்ந்து சிவா, மதியொளி ராஜா, ஆகாஷ், மணி ஆகியோர் கவனித்துள்ளனர்.