சினிமா

15 வகையான நாட்டுப்புற பாடல்களுடன் திரைக்கு வரும் ”டப்பாங்குத்து” !!

மாடர்ன் டிஜிடெக் மீடியா எல்எல்பி (Modern Digitech Media LLP) வழங்கும், எஸ். ஜெகநாதன் தயாரிப்பில், இயக்குநர் முத்துவீரா இயக்கத்தில், மதுரை மண்ணின் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் புதிய திரைப்படம் ”டப்பாங்குத்து”.

படத்தில், மதுரையைச் சேர்ந்த பாண்டி என்பவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் ஆட்டக்காரன். அவர் தன் குழுவினருடன் சேர்ந்து மதுரையை சுற்றி உள்ள ஊர்களுக்குச் சென்று நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அவருடைய தாய் மாமன் தர்மலிங்கம், கலை நிகழ்ச்சிகளுக்கு நாடக நடிகர்களை புக் பண்ணி கொடுக்கும் ஒரு புரோக்கராக இருக்கிறார். அதே ஊரை சேர்ந்த தனம் பாண்டியனின் கலை நிகழ்ச்சிகளுக்கு சென்று ஆடுவதற்கு முடிவு செய்கிறாள்.

ஆனால் தர்மலிங்கம் தனத்தை பாண்டியின் குழுவில் சேர்ந்து ஆடக்கூடாது என்று முட்டுக்கட்டை போடுகிறார். இதனால் பாண்டிக்கும் தர்மலிங்கத்திற்கும் மோதல் ஏற்படுகிறது. தர்மலிங்கம் ஏன் தனத்தை ஆடக்கூடாது என்று சொல்கிறார், தனத்திற்கு பின்னணி என்ன? தனம் பாண்டியோட மேடை ஏறினாளா எனப்து தான் இப்படத்தின் கதை.

இத்திரைப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா-வின் தெற்கத்தி பொண்ணு மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட சங்கர பாண்டி கதாநாயகனாக நடிக்க தீப்தி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் காதல் சுகுமார், ஆன்ரூஸ், துர்கா, விஜய் கணேஷ், ரோபோ சந்துரு, மற்றும் பலர் நடிக்கின்றனர். மேலும் பறவை முனியம்மா, கரிசல் கருணாநிதி, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், கிடாக்குழி மாரியம்மா, ஆக்காட்டி ஆறுமுகம், செந்தில் ராஜலட்சுமி, என நாட்டுப்புற கலைஞர்களின் பட்டிதொட்டியெங்கும் பட்டய கிளப்பிய பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

இப்படத்தின் பாடல்கள் அனைத்திற்கும் தீனா மாஸ்டர் பிரமாண்டமாக நடனம் அமைத்துள்ளார். தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு சிறப்பாக வந்துள்ளது. இப்படத்தின் கலையை சிவாயாதவ் கவனிக்க, ஒளிப்பதிவை ராஜா கே பக்தவச்சலம் கவனிக்க, சரவணனின் இசையில், குணசேகரனின் கதை திரைக்கதை வசனத்தில், முத்துவீராவின் இயக்கத்தில் மதுரை மண்ணின் மணம் மாறாமல் ரசிகர்களின் மனதை கவரும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.

சென்சார் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு ‘U’ சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம் இம்மாதம் நவம்பர் 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது.

தொழில் நுட்ப கலைஞர்கள்
இயக்கம் – முத்துவீரா
கதை திரைக்கதை வசனம் – STகுணசேகரன்
ஒளிப்பதிவு – ராஜா கே பக்தவச்சலம்
இசை – சரவணன்
நடனம் – தீனா மாஸ்டர்
சண்டை பயிற்சி – ஆக்க்ஷன் பிரகாஷ்
மக்கள் தொடர்பு – செல்வரகு எஸ்
தயாரிப்பு – Modern Digitech Media LLP

விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் முத்துவீரா பேசுகையில்,

மதுரையைச் சுற்றி நடக்கும் தெருக்கூத்து கலைகளை மையப்படுத்தி இப்படத்தை எடுத்துள்ளோம். கதாநாயகன் ஒரு தெருக்கூத்து கலைஞர், நாயகி தெருக்கூத்து ஆசைப்படும்போது, கதாநாயகனின் மாமா தடை போடுகிறார், கதாநாயகனின் அம்மா பற்றிய மர்மம் என்ன என்பது தான் இந்தப்படத்தின் கதை. கிராமியக்கலைகள் அழிந்து வருகிறது அதைப் பதிவு செய்யும் விதமாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி என் கூறினார்.

“டப்பாங்குத்து” நாயகன் சங்கரபாண்டி பேசியதாவது,

நாட்டுப்புறக் கலைகளை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளோம். கிராமங்களில் தெருக்கூத்து இப்போதும் நடந்து வருகிறது. நாங்களும் நிறையக் கலந்து கொண்டுள்ளோம். இந்த காலத்தில் தெருக்கூத்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. நம் கலைகள் மொத்தமாக அழிந்து போகுமோ என்ற கவலை இருந்தது. ஒரு முறை பாவைக் கூத்து கலைஞர்கள் உணவுக்கு அல்லல்படுவதைப் பார்த்த பொழுது, மிக மிக வருத்தமாக இருந்தது. இப்படியான காலகட்டத்தில் தெருக்கூத்தை மீட்டெடுப்பது போல், ஜெகநாதன் சார் படம் எடுக்கிறார் என்ற பொழுது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இப்படிப்பட்ட படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு கரும்பு திண்ணக் கூலி தான். கரகாட்டக்காரன் படத்திற்குப் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பின்னர் இதுபோன்ற படத்தை எடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. இப்படத்தில் அருமையாக நடனம் அமைத்த தீனா மாஸ்டர், உடன் நடித்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. கிராமியக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் என கேட்டுக்கொண்டார்.

நாயகி தீப்தி பேசும்போது,

இந்தப்படத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக வேலை செய்துள்ளோம், இந்தப்படத்தில் நிறைய பாடல்கள் இருக்கிறது கண்டிப்பாக மக்கள் அனைவருக்கும் பிடிக்கும். நான் பஞ்சாபியாக இருந்தாலும் அப்பா இங்கு செட்டிலானவர், நான் சென்னையில் பிறந்தவள், எனக்குச் சென்னை தான் எல்லாம் தான். அதனால் இந்தப்படத்தில் கிராமிய கலாச்சாரம் புரிந்துகொள்வது எளிமையாக இருந்தது. முழு அர்ப்பணிப்பையும் தந்து உழைத்திருக்கிறேன் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *