101 – ஆம் ஆண்டு மயூர வாகன சேவன விழா டிசம்பர் 31-ல் நடைபெறும்
சென்னை: சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள ஸ்ரீமத் குமருதாச சுவாமிகள் திருக்கோவிலின் மயூர வாகன சேவன விழா வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதியன்று நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Temple Location: https://maps.app.goo.gl/4KVZgbrACXjSUJHq7
விபத்தினால் பாம்பன் சுவாமிகள் உடல் நலிவுற்று கடந்த 1924 ஆம் ஆண்டு சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுவாமிகளின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் முருகன் குழந்தை உருவில் பாம்பன் சுவாமிகளின் கனவிலும், நினைவிலும் காட்சியளித்து அவரின் உடல் பிணியை நீக்கினார்.
அந்தாண்டு முதல் பாம்பன் சுவாமிகளின் உத்தரவுப்படி இதுவரை அவரின் அடியார்களால் ஆண்டுதோறும் மயூர வாகன சேவன விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தாண்டு 101-ஆவது ஆண்டாக கொண்டாடப்படவுள்ளது. வருகின்ற மார்கழி மாதம் 16,17 ஆம் தேதிகளில் அதாவது டிசம்பர் 31, 2024 மற்றும் ஜனவரி 1, 2025 ஆகிய நாட்களில் மயூர வாகன சேவன விழா கொண்டாடப்படவுள்ளது.
டிசம்பர் 31 ஆம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு ஹோமம் மற்றும் தீபாராதனைகளுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளுக்கு பஞ்சாமிர்த வண்ண பாடல்களுடன் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.
அன்று மாலை 4:30 மணிக்கு கோவிலில் வீற்றிருக்கும் விநாயகர், மயூர நாத சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் மற்றும் வஜ்ராயுதத்திற்கு சிறப்பு பஞ்சாமிர்த்த வண்ண பாடல்களுடன் பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.
இரவு 7 மணிக்கு மயூர விருதுகளுக்கு அலங்காரமும் ஆராதனையும் செய்யப்படும். தொடர்ந்து சோட சோபசார ஆராதனையுடன், திருப்புகழ் இசைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட வஜ்ராயுதம், மயூர விருதுகள் திருவான்மியூரின் மாட வீதிகளில் திருவீதி உலா நடைபெறும்.
அன்றிரவு 9:30 மணி முதல் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல்கள் பாராயணமும், இன்னிசை சொற்பொழிவும் நடைபெறும்.
மறுநாள் ஜனவரி 1 ஆம் தேதியன்று காலை பாம்பன் சுவாமிகள் அருளிய பதிகங்கள் ஓதுதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர் என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், அவசர மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோல் பக்தர்களின் பாதுகாப்பிற்காக திருவான்மியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.