மயிலாப்பூர் நிதி நிறுவன முறைகேடு வழக்கு; பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு
சென்னை: மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் நிதி லிமிடெட் நிறுவனத்தின் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு தொகையை செலுத்த தவறிய வழக்கில், அந்நிறுவனத்தின் இயக்குனர்களில் தேவநாதன் யாதவ், குணசீலன், மஹிமைநாதன், தேவசேனாதிபதி, சுதிர்சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவாக இருக்கும் சாலமன் மோகன்தாஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுவரை இந்நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட 5160 பேர் காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளனர். அவர்களுக்கு சேர வேண்டிய இழப்பீடு தொகை சுமார் 586 கோடி ரூபாய்.
நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் இதுவரை, 7.5 லட்சம் ரூபாய் ரொக்கம், 180 கிராம் தங்கம், 84 கிராம் வெள்ளி, வங்கி இருப்பு ரூபாய் 16 லட்சம் ரூபாய், 6 நான்கு சக்கர வாகனங்கள், 280 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள், 175 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு பத்திரங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
