இலங்கையில் முதலீடு செய்ய பப்புவா நியூ கினியா நாட்டின் இந்தியாவுக்கான வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபுவிற்கு நேரில் அழைப்பு விடுத்தார் இலங்கை இணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
கோவை: இலங்கையில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசு இலங்கையின் பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இலங்கை இணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதார்.
இதன் ஒரு கட்டமாக கோயம்பத்தூரில் வசிக்கும் பப்புவா நியூ கினியா நாட்டின் இந்தியாவுக்கான வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபுவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். இலங்கை அமைச்சரை வரவேற்ற விஷ்ணு பிரபு அவருக்கு “இந்தியா நவ்” என்னும் நூலினை பரிசளித்தார்.
அப்போது பப்புவா நியூ கினியா நாட்டின் முதலீடுகளை இலங்கையில் செய்து, நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டுசெல்ல பங்களிக்குமாறு பப்புவா நியூ கினியா நாட்டின் இந்தியாவுக்கான வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபுவை இலங்கை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், நான் இலங்கையின் பெருந்தோட்டம் துறை அமைச்சராக உள்ளேன், எங்களது நாட்டில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. இலங்கை ஒரு பொன் விளையும் பூமி. தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்கள் எங்களது அதிகாரிகளிடம் கலந்து பேசி அவர்களுக்கு விருப்பமான துறைகளில் முதலீடு செய்யலாம் என்று கூறினார்.

