விளையாட்டு

இதய ஆரோக்கியத்தை வலியுறுத்தி கிரிக்கெட் போட்டி

சென்னை: கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களிடையே இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் பிரசாந்த் மருத்துவமனை சார்பில் கிரிக்கெட் நடத்தப்படுகிறது.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறும் கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டி – 2025 இன்று துவங்கி ஜனவரி 26 வரை நடைபெற உள்ளது.

பிரசாந்த் மருத்துவமனையின் ‘இளம் இதயங்களை காப்போம்’ என்ற பிரச்சாரத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் இடையே இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பிரசாந்த் மருத்துவமனைகள் திட்டமிட்டுள்ளது.

இளைஞர்களிடையே இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை இந்தப் கிரிக்கெட் போட்டி ஏற்படுத்துவதோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உடற்பயிற்சிக்கான அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

சென்னையை அடுத்த புதுவாயலில் உள்ள டிஜெஎஸ் என்ஜினியரிங் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை , டிஜெஎஸ் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் கோவிந்தராஜன், பிரசாந்த் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா, தலைமை செயல் அதிகாரி டாக்டர் பாஸ்கரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 36 அணிகள் பங்கேற்கின்றன. முதல் நாள் போட்டியில் கெல்லனோவா (Kellanova) அணி Vs பிரிஸிஸன் ஹைட்ராயூக்ளிக்ஸ் காம்போனென்ட்ஸ் (Precision Hydraulics Components) அணி இடையே போட்டி நடைபெறுகிறது.

இந்த கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரமும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.25 ஆயிரமும் பரிசு வழங்கப்படும்.

இது குறித்து பிரசாந்த் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா கூறுகையில், இதய ஆரோக்கியம் என்பது மருத்துவ பராமரிப்புக்கு அப்பாற்பட்டது, எங்களின் முக்கிய நோக்கம், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இதய பாதிப்பு இல்லாமல் அனைவரும் இருக்க வேண்டும் என்பதாகும். அந்த வகையில் பரபரப்பான பணிச் சுமைகளுக்கு இடையில் இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நாங்கள் ‘இளம் இதயங்களை காப்போம்’ என்னும் பிரச்சாரத்தை செய்து வருகிறோம். அந்த வகையில், கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டியானது அவர்கள் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது. கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் இளைஞர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குழுப்பணியை வளர்க்கவும் உதவுகின்றன. அவர்களின் இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதற்காக இது போன்ற நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்துவது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்தார்.

டிஜெஎஸ் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் கோவிந்தராஜன் பேசுகையில், பிரசாந்த் மருத்துவமனையின் இந்த அற்புதமான நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முயற்சி, உட்கார்ந்த நிலையிலேயே பணியாற்றும் இளைஞர்களுக்கு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் விளையாட்டு மற்றும் உடல் பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. அதேபோல் ‘இளம் இதயங்களை காப்போம்’ என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பிரசாந்த் மருத்துவமனைக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *