திமுக கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம்; முதல்வர் இரங்கல்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக-வின் செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் மாரடைப்பால் இன்று காலமானார்.
திருப்பதியில் நடைபெற்ற அவரது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நிலையில் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக அங்கேயே அவர் உயிரிழந்துள்ளார்.
நாளை காலை அவரது உடல் கோயம்பத்தூரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
கோவை செல்வராஜின் மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கோவை செல்வராஜ் சமீபத்தில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றார். மகனின் திருமணம் வைத்திருப்பதாகவும், திருமணம் முடிந்தவுடன் மணமக்களுடன் வந்து என்னிடத்தில் வாழ்த்து பெறுவதாகவும் தெரிவித்திருந்தார். அவரது இறப்பு என்னை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.