அரசியல்

ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் கோட்டூர்புரம் அடுக்குமாடி குடியிருப்புகள் பிப்ரவரி 20க்குள் திறப்பு: அமைச்சர்கள் ஆய்வு

சென்னை | ஜனவரி 30, 2026

சென்னை, கோட்டூர்புரத்தில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1,800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், வரும் பிப்ரவரி 20, 2026-க்குள் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

புதிய அடுக்குமாடி கட்டிடத்தின் கட்டுமான பணிகளை, தமிழக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பிறகு பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கான்கிரீட் வீடுகளில் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்ற நோக்கில், மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே இருந்த 1,476 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, 1,800 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார். இத்திட்டத்தில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், குடியிருப்புகளின் பரப்பளவு குறைந்தது 400 சதுர அடியாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், பயனாளிகளின் பங்குத் தொகை ரூ.1.50 லட்சமாக குறைக்கப்பட்டு மாதத் தவணையில் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த 5 நாட்களில் சென்னையில் 5 திட்டப்பகுதிகளிலும், பிற மாவட்டங்களில் 11 திட்டப்பகுதிகளிலும், மொத்தம் ரூ.1,238 கோடி மதிப்பீட்டில் 9,696 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்காலிக ஊழியர் போராட்டம் குறித்து விளக்கம்

தற்காலிக ஊழியர்களின் போராட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்காலிக பணியாளர்களை பணிநிரந்தரம் செய்வது சட்டப்படி சாத்தியமில்லை என்றும், இவ்வகை போராட்டங்கள் சிலர் தூண்டுதலால் நடைபெறுவதாகவும் கூறினார். தேர்தல் காலத்தை முன்னிட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே இதுபோன்ற போராட்டங்கள் நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

குற்றச் செயல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கு பதில்

தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் கூறிய குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், National Crime Records Bureau (NCRB) தரவுகளின் அடிப்படையில், இந்தியாவின் 36 மாநிலங்களில் குறைந்த குற்றச்செயல்கள் பதிவாகும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என சட்டமன்றத்தில் சமூகநலத்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி. சிங், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *