செய்திகள்

1.5 கோடி மதிப்பீட்டில் மாணவர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தினை டாக்டர் லீமா ரோஸ் மார்டின் திறந்து வைத்தார்

சிவகங்கை, 08 நவம்பர் 2024: மார்டின் குழுமத்தின் சார்பாக ஏழை மாணவர்களின் திறன்களை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகளை வழங்கும் “செம்மண் முற்றம்” எனும் பயிற்சி மையம் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் சீகூரணியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக சீகூரணி எனும் கிராமத்தில் சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தை செம்மண் அறக்கட்டளைக்கு மார்ட்டின் நிறுவனம் இலவசமாக வழங்கியது. மேலும், இந்நிலத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் பயிற்சி மையத்திற்கான கட்டிடம் கட்டியதோடு, அதற்கு தேவையான கணினி, மேஜை, நாற்காலிகள், எழுதுபொருட்கள் உள்ளிட்டவற்றையும் வழங்கியுள்ளனர்.

இந்த பயிற்சி மைய கட்டிடத்தினை மார்டின் குழுமத்தின் இயக்குனர் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

செம்மண் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர். நோயல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அகில இந்திய கிறிஸ்தவ உயர் கல்வி சங்கத்தின் இயக்குனர் அருள்முனைவர் சேவியர் வேதம் முன்னிலை வகித்தார்.

பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், கணினி பயிற்சி, பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல்களையும் இப்பயிற்சி மையம் வழங்கும். மேலும், அரசு பணிகளுக்கான போட்டி தேர்விற்கான பயிற்சியும், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான மென்திறன் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அதேபோல், புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து தொழில் சார்ந்த பயிற்சி வழங்குதல், தொழிலில் வெற்றி பெற்றவர்களின் அனுபவங்களை பகிர்வது, நிதி ஆதரங்களை திரட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகளையும் வழங்குகிறது. வெளியூர் மாணவர்கள் தங்கி பயிற்சி பெறுவதற்காக இலவச விடுதி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மார்டின் குழுமத்தின் இயக்குனர் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் பேசுகையில், “மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் நல்ல வேலை கிடைப்பதற்கும், வாழ்வின் சவால்களை எதிர்கொள்வதற்கும் பள்ளி படிப்போடு, வாழ்வியல் திறன்கள் மிக அவசியம். ஏழை மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மார்டின் குழுமமும் இப்பயிற்சி மையத்தினை துவக்கியுள்ளது. ஏழை மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தி அவர்களுக்கு சிறப்பான ஒரு எதிர்காலத்தை இந்த பயிற்சி மையம் நிச்சயம் வழங்கும் என அவர் தெரிவித்தார்.”

“கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் வாழ்வியலை மேம்படுத்த இதுபோன்று சமூக சேவை நிறுவனங்களுடனும், கல்வி நிறுவனங்களுடனும் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களை மார்ட்டின் குழுமம் செய்து வருகிறது. பல மாவட்டங்களில் அரசு பள்ளிகளை தத்தெடுத்து அவற்றிற்கு தேவையான கூடுதல் வகுப்பறை, சமையலறை, கழிப்பறை கட்டிடங்களை கட்டுதல், மாணவர்களுக்கு ஆய்வகம், கணினி மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மார்ட்டின் குழுமம் தனது சொந்த செலவில் செய்து அரசு பள்ளிகளை மேம்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.”

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன முன்னாள் தலைவர் ஜோன்ஸ் ரூசோ, மைக்கேல் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *